Friday, December 30, 2022

 ஆணி 


பல ஐ.டி. பார்க்குகள் நிறைந்த ,24  மணிநேரமும் பரபரக்கும் சாலையில் உள்ள டீக்கடையில் அமர்ந்திருந்தான் சங்கர் .  அப்போது உள்ளே நுழைந்த நபர் அனைவரிடம் சகஜமாகப் பேசி சங்கரையும் பார்த்துப் புன்னகைத்து " சார் வணக்கம் .எம்பேரு கமால். டாப் பங்க்சர் ஷாப் ஓனர் . இங்க டீ எனக்கு பிடிக்கும், அதனால அடிக்கடி வருவேன்.நீங்க ?"

"கேள்விபட்டுருக்கேன். எல்லாருக்கும் இங்க உங்க கடைதான். ஆமா... இங்க மட்டும் தானா? இல்ல வேற இடத்துல ?"

"இடப்பற்றாக்குறை. அதனால நிறைய இடங்கள்ல கடை போடமுடில. இருக்கிற கடைய பெருசாக்குறேன் .நீங்க யார்னு?"

"உங்களோடது அசுர வளர்ச்சி. எப்படி சாத்தியமாச்சு ? "

"ஆமா சார் ...(ரகசியமான குரலில்) நியாயமா முயற்சி பண்ணேன்.  முன்னேறல.  இப்ப ஒரு பெரிய டீம் .லட்ச லட்சமா சம்பாதிக்கிற, சொகுசு வாகனங்கள்ல போற வண்டிகளை பஞ்சராக்க என் டீம் அங்கங்க ஆணிகள வீசும்.  அப்புறம் எங்களைத்தான் கூப்பிடனும்.கவனிக்க வேண்டியவங்கள கவனிச்சு இன்னிக்கு பெரிய இடத்தில இருக்கேன். சார் நீங்க யாருனு இன்னும் சொல்லவேயில்லயே ?"

"நீங்களும் உங்க டீமும் பண்ற இந்த உத்தமமான வேலைல வாகனங்கள் பாதிக்காமத் தடுக்க ,சக்திவாய்ந்த மேக்னெட்டிக் டிடெக்டர் மூலமா நீங்க வீசுற ஆணியெல்லாத்தையும் பொறுக்கிற ஒரு சாதாரணமான, தன்னார்வ அமைப்போட மக்கள் தொண்டன் "

Sunday, May 29, 2011

அவள்

அவள் நாளை வருகிறாள்.
 
என் இதயம் முழுவதும் சந்தோஷச் சுனாமி!   இதுவரை
உணராத ஒருவித தவிப்பு. இறக்கைகள் முளைத்தது போல்
புதுவகை சுறுசுறுப்பு.
 
அவள் வந்ததும் அப்படியே அலாக்காக தூக்கி ஒரு
சுற்று சுற்ற வேண்டும். கட்டி அணைத்து முத்தமிட்டு
கதை பேச வேண்டும். என் அன்பை முழுவதுமாய்
குத்தகை எடுத்த அவளுக்கு ஏராளம் வாங்கித்தர
பட்டியல் தயார்.
 
உறக்கமில்லாமல் கழிந்தது இரவு.
புதுப்பூவாய் புலர்ந்தது பொழுது.
 
அழைப்பு மணி ஒலித்தது.
 
ஆம்...வந்துவிட்டாள்....
என் அக்காவின் ஐந்து வயது அழகு மகள்!
 
 [ தினமலரில் 22 -8 - 2010 ல்௦ வெளியானது] 

Friday, May 20, 2011

அர்த்தங்கள்


மீனா அபார்ட்மென்ட்ஸ்.   மூன்றாவது ப்ளோரின் 21ம் நம்பர் வீடு. சமையல் முடித்து ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி  நிகழ்ச்சியினை காண கண்ணாடி ஜன்னலின் திரைச்சீலையை மூட வந்தவளுக்கு திக்கென்றிருந்தது.
உடனே கணவனிடம் சென்று,

"இதோ பாருங்க, உங்க அப்பாவும் அம்மாவும் கீழே வந்துகிட்டிருக்காங்க, சும்மா விட்டோம்னா இங்கயே ஒரேயடியா தங்கிடுவாங்க. அதனால அவங்க வந்ததும் நாங்க திருப்பதி போறோம், வர ஒரு வாரம் ஆகும்னு
சொல்லி அந்த கிழங்கள விரட்டிடுங்க ..சரியா?"


"சரி சரி"

அழைப்பு மணி அழைத்தது.

கதவை திறந்ததும் மலர்ந்த முகத்தோடு அந்த வயோதிக உள்ளங்கள் வந்ததுஉடனே அவன் தன்மனைவி சொன்ன வார்த்தை பிசகாமல் படபடப்போடு அனைத்தையும் சொல்லி முடித்தான்.அவர்களும் பாவமாய்

"சரிப்பா...பரவாயில்லப்பா, இந்தப் பக்கம் ஒரு வேலையா வந்தோம்...இவ பேரன பாக்கனும்னா. நாங்க பார்த்துட்டு போயிடறோம்" என்றார்கள்.

குழந்தையை பார்த்ததும் சந்தோசம் கொள்ளவில்லை அவர்களுக்கு.
குழந்தையோ அழுது கதறியது.
கொஞ்சிவிட்டு அவர்கள் கிளம்பினார்கள்.


கதவை தாளிட்டு வந்து "அப்பாடா...போக வச்சாச்சு" என்று கணவனும்,  மனைவியும் சந்தோஷப்பட்டார்கள்.

அவ்வளவு நேரம் அழுத அந்த எட்டு மாதக்  குழந்தை அவர்கள் இருவரையும்  பார்த்து 'கக்கக்கவென' சிரித்தது.சத்தமாய் அழது அரற்றிய குழந்தை திடீரென சிரிப்பதை பார்த்து ஆச்சர்யப்பட்டனர்.

"பாசமாய் வந்த அய்யா அப்பத்தாவை விரட்டி விட்டீர்களே.எத்தனை வருடம் உங்களுக்காக அவர்களை சிதைத்து 
கொண்டு உங்களை இந்த உச்சியில் வைத்திருக்கிறார்கள்.அடுத்தவரோட 
உணர்வுகளை உணர்ந்து, மதிச்சு நடக்கிறவன் தான் மனுஷ ஜென்மம். உங்களுக்கு போய் நான் பொறந்ததுல வெட்கப்பட்டு, வேதனைப்பட்டு தான் என் அய்யா அப்பத்தாவோட நான் இருக்க முடியலயேன்னு அழுதேன்இப்படியும் அப்பா அம்மா இருக்காங்களேன்னு உங்கள  பார்த்து சிரிக்கிறேன்" என்று அந்த குழந்தையின் சிரிப்பில் அர்த்தங்கள் இருப்பதாய் அவர்களுக்கு 
உரைத்தது.

கிளிப்பேச்சு


நெருக்கடியான நகரப் போக்குவரத்து நிறைந்த நெடுஞ்சாலை.வாகனங்கள் 
அனைத்தும் பரபரப்பை,சத்தங்களோடு விரைந்து  கொண்டிருந்தன. அதில் புதிதாய் வாங்கிய மாருதி-800 ல்  இன்னும் ஒரு மாதத்தில்  
நடக்கவிருக்கும் கல்யாணம் பற்றிய நினைவுகளோடு வண்டியை 
ஓட்டிக்கொண்டிருந்தாள் ஹனு. வருங்காலக் கணவன்,வாங்க நினைக்கும் நகைகள், சேலைகள் என வண்ண வண்ண கனவுகளின் ஒத்திகையோடு அவள் சென்றுகொண்டிருந்த போது திடீரென
ஒரு வளைவில்  வேகமாய் வந்த லாரி அவள் கார் மீது மோத அவள் தூக்கி எறியப்பட்டாள். சாலையோரம் இருந்த இரும்புக்கம்பியில் அவள் கழுத்து அடிபட்டு விழுந்தாள். கூட்டம் கூடியது.

பிறகு...

சோலை மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவு. டாக்டர்கள், நர்சுகள் என துரிதமாய் செயல்பட
அவளுடைய முகவரியறிந்து வீட்டுக்கு தகவல் சொல்லப்பட இரு வீட்டாரும் வந்து அழுகையும், பயமுமாய் தவித்து கொண்டிருந்தனர்.

சாயங்காலம் டாக்டர் அழைத்தார்.

"பெரிசா பயப்பட ஒண்ணுமில்ல.ஆனா இரும்பு கம்பில மோதி பலமா அடிபட்டதால இனி பேசுரதுங்கிறது
கொஞ்சம் கஷ்டம். ஆனா பேச்சே வராதுங்கிறது இல்ல. பேசி பேசி பழகனும்" என்றார். நிச்சயம் செய்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பத்திரிக்கைகள் எல்லாம்  கொடுத்தாகி விட்டது.

இரண்டு வாரங்களுக்கு பின் ஹனு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாள். வீட்டில் உள்ள தனது அறைக்கு சென்று ஊஞ்சல் நாற்காலியில் ஆடியபடியே பழைய நினைவுகள், கல்யாணம், விபத்து என்று சோகமாய் இருந்தாள்.

அப்போது "ஹனு...ஹனு..." என்று கூண்டுக்கிளி அழைத்தது.

அவள் அதை பார்த்தாள். தான் இருக்கும்  நிலையை போல, சொல்ல முடியாத சோகங்களோடு தானே அந்தக் கிளியும்  இருக்கும் என்று நினைத்தாள். அதை அடைத்து வைக்க கூடாது. சுதந்திரமாய் அது பறந்து திரியட்டும் என எழுந்து சென்று கூண்டை திறந்து விட்டாள். கிளி வெளியே போக மறுத்தது.

ஹனுவை பார்த்து "அம்மா...அம்மா..." என்றது... பிறகு" அப்பா...அப்பா.." என்று சொன்னது.

அவை,அந்த வார்த்தைகள் ஆசையோடு அந்த கிளியை வாங்கி வந்து ஹனு சொல்லி கொடுத்த வார்த்தைகள்.

கிளி மீண்டும் "அம்மா...அம்மா.." என்றது.

ஹனு கண்களில் நீர் திரள "....அம்....மா..." என்று பேச பழகினாள்.