Friday, May 20, 2011

சாமியிருக்கா?


அருள் தரும் குருவம்மன் கோயில் திருவிழா என்பதால் அசுரம்பட்டி கிராமமே ஒருசேரக் கூடியிருந்தது. தோரணங்களும், ராட்டிணங்களும்,வண்ண விளக்குகளும்,கச்சேரி,கூத்து என பொழுது போக்கு நிகழ்ச்சிகளுமாய் கலகலவென மக்கள் பல ஊர்களிலிருந்து வெள்ளமாய் வர விமரிசையாக விழா நடந்துகொண்டிருந்தது.

குருவம்மன் கோயிலில் ஒரு விசேஷம் என்னவென்றால் கோயிலுக்கு உள்ளே ஒரு அறையில் வேண்டுதல் செய்தால் நிச்சயம் நடக்குமென அந்த கிராமமே நம்பியது. குழந்தை இல்லாதவர்க்கு குறை தீர்ந்து, கன்னிகளுக்கு கல்யாணம், தொழில் துறையில் லாபம் என்று அந்த அறையில் வேண்டினால் ஈடேறும் என மக்கள் அபரிமிதமான எண்ணம் கொண்டிருந்தனர்.

சந்தோஷத்துடன் காணப்பட்ட மக்களின் கூட்டத்தை விடுத்தது கோயிலின் பின்புறமுள்ள மாமரத்தடியில் ஒரு ஜோடிகள் தனித்திருந்தது. காதலி காதலனை பார்த்து...

"இந்த குருவம்மன் ரொம்ப சக்தியானது. நம்ம காதல் நிறைவேற வேண்டிக்கலான்னு இருக்கேன். நிச்சயம் நாம ஒண்ணா சேரலாம்"

"எப்ப வேண்டிக்கப் போற?"

"கூட்டம் குறைஞ்சதும் ஒரு பத்து மணிக்கு போல... யாரோ வர்ற மாதிரி இருக்கு ...சரி நாளைக்கு பிள்ளையார் கோயில் தெப்ப குளத்துக்கு பக்கம் சந்திக்கலாம்என்று கலைந்தனர்.

மறுநாள் தெப்பக்குளக் கரையில் வெகு நேரம் காத்திருந்த அந்த காதலன் காதலியை காணாது கிராமத்துக்குள் நடந்தான். குருவம்மன் கோயிலுக்கு அருகில் கூட்டமாக இருந்தது. திருவிழா முடிந்தும் கூட்டம் தணியவில்லையே என்று கூட்டத்தை விலக்கிவிட்டு உள்ளே நுழைந்த காதலன் அதிர்ந்து போனான். காதலி இறந்து கிடந்தாள்

காரணம் சொன்னார்கள், "குருவம்மன் கோயிலுக்குள்ள வேண்டுதல் அறையில் அவள் வேண்டிக்கொண்டிருந்ததை கவனிக்காது அந்த வயசான பூசாரி கதவை பூட்டிக்கொண்டு போய்விட்டாராம்"

காதலி மடிந்து போனாள். காதலன் இடிந்து போனான்.

1 comment: